இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் நாளை வெளியாக உள்ள கேங்கர்ஸ் திரைப்படம் மற்றும் நாளை மறுநாள் நடிகர் சிவா நடிப்பில் வெளியாகவிற்கும் சுமோ ஆகிய இரண்டு நகைச்சுவை படங்களுக்கிடையே நிகழும் போட்டியில் ரசிகர்கள் மத்தியில் எந்த படத்திற்கு ஆதரவுக் கிடைக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அவ்னி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் சுந்தர்.சி இயக்கியும் நடித்தும் உருவாகியுள்ள கேங்கர்ஸ் படம் ஏப்ரல் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் வடிவேலு, கேத்தரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த, ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர் போன்ற பலரும் நடித்துள்ளனர். மேலும், கேங்கர்ஸ் படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். பல வருடங்கள் கழித்து சுந்தர்.சி மற்றும் வடிவேலு காம்பினேஷனுடன் நகைச்சுவை படமாக வெளியாக உள்ளது.
நடிகர் வடிவேலு நகைச்சுவை கதாப்பாத்திரங்களை தவிர்த்து ஹீரோவாக நடிக்க தொடங்கி சில ஆண்டுகளிலேயே மார்க்கெட்டை இழந்தும், அரசியல் ஈடுபாட்டில் பேசிய சில வார்த்தைகளினாலும் திரைத்துறையை விட்டு சற்று விலகியிருந்தார். அதன் பிறகு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற சில வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் எஸ்.பி.ஹொசிமின் இயக்கத்தில் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள சுமோ திரைப்படம் வருகிற ஏப்ரல் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், சதிஷ், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், யோஷிநொரி டஷிரோ சுமோ வீரராக நடித்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
அடுத்தடுத்து வெளியாக உள்ள கேங்கர்ஸ் மற்றும் சுமோ திரைப்படங்களில் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக வடிவேலு மற்றும் சுந்தர். சி காம்பினேஷனில் உருவாகி உள்ள கேங்கர்ஸ் படத்துக்குத்தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 மற்றும் மத கஜ ராஜா படங்கள் வசூலில் மிரட்டிய நிலையில், ஹாட்ரிக் அடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சூது கவ்வும் 2 படத்தின் மூலம் ரசிகர்களை சோதித்த சிவாவின் சுமோ படத்தை பார்க்க மக்கள் தியேட்டருக்குச் சென்று ஆர்வம் காட்டுவார்களா என்பது டவுட்டு தான்.