Thug Life: மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் தக் லைப். நாயகன் படம் வெளியாகி 35 வருடங்கள் கழித்து கமலும் மணிரத்னமும் இணைந்திருக்கிறார்கள் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களிடமும், திரையுலகிலும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். செக்கச் சிவந்த வானம் ஸ்டைலில் இப்படமும் ஒரு கேங்ஸ்டர் படமாகவே இருக்கும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். முதன் முறையாக கமலோடு சிம்புவும் இணைந்திருப்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில்தான் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், மணிரத்னம், சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது அனைவரும் இந்த படம் பற்றிய தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

சினிமாவில் செய்தியாளர் சந்திப்பு என்பது நன்றி சொல்லும் நிகழ்ச்சி போல மாறிவிட்டதற்கு என்பதற்கு இந்த படமும் தப்பவில்லை. சிம்பு கமலுக்கும், மணிரத்னம் கமலுக்கும், கமல் ரசிகர்களுக்கும் என எல்லோரும் மாறி மாறி நன்றி சொல்லிக்கொண்டார்கள் இதில், கமல் மட்டும் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டார்.
மணிரத்னத்துக்கு நான் ஒரு பட்டப்பெயர் வைத்திருக்கிறேன். அது ஐந்தரை மணி – ரத்னம். ஏனெனில், காலையில் 5.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் அவர் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். முதல் காட்சியை அப்போது எடுக்க வேண்டும் எனவும் ஆசைப்படுவார் என சொல்லி சிரித்தார். இதைக்கேட்டு மணிரத்னமும் சிரித்தார்.
இந்நிலையில், வருகிற மே 16ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே, பரபர ஆக்சன் காட்சிகளை கொண்ட டிரெய்லரை கட் பண்ணும் பணியில் மணிரத்னம் ஈடுபட்டிருக்கிறாராம். இந்த விழா சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாளாக அமையும் என சொல்லப்படுகிறது.