தமிழ் கிரைம் திரில்லர் வரிசையில் புதிய சேர்த்தியாக வருகிறது மூன்றாம் கண் படம். அறிமுக இயக்குநர் சசோ கணேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் நல்ல கவனத்தை பெற்று வருகிறது. ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படம், கிரைம் திரில்லர் ரசிகர்களிடம் ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
மூன்றாம் கண் படத்தின் கதை என்ன?
ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். வழக்கமான கொலை வழக்காக தொடங்கும் விசாரணையில் திடீரென நான்கு பேர் தாங்கள்தான் அந்தக் கொலையை செய்தோம் என்று தனித்தனியாக ஒப்புக்கொள்கிறார்கள். இவர்களில் உண்மையான குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கவே போலீஸுக்கு திணறுகிறது. இந்த மையக்கருவே படத்தை தனித்துவமாக்குகிறது.
ஹைபர்லிங்க் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் காதல் காட்சிகளுக்கு இடமே இல்லை என இயக்குநர் தெரிவித்திருக்கிறார். தொடக்கம் முதல் இறுதி வரை மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் மட்டுமே நிரம்பி இருக்கும் என்று படக்குழு உறுதியளித்திருக்கிறது.

படத்தணி யார் யார்?
விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி மற்றும் சுந்தரா டிராவல்ஸ் ராதா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் பிரதாப் இதுவரை தான் செய்யாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் தென்படுவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜீஸ் இசையமைத்திருக்கிறார். என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவும், ராஜ் பிரதாப் பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா சவுத் கைப்பற்றியிருக்கிறது.

படப்பிடிப்பின்போது நிஜத் தொழிற்சாலையில் எடுக்கப்பட்ட கொலைக் காட்சி அங்கிருந்த தொழிலாளர்களையே பதற்றமடையச் செய்தது என படக்குழு பகிர்ந்திருக்கிறது. காட்சிகளின் நேர்த்தி அவ்வளவு தத்ரூபமாக இருந்ததாக கூறப்படுகிறது.டீசரில் தெரியும் மர்ம சூழல், வேகமான திருப்பங்கள் ரசிகர்களை ஜூன் 12க்காக காத்திருக்க வைக்கிறது.