ரவி மோகன்பொது மன்னிப்பு கோரல் நீதிமன்ற உத்தரவை மீறியதற்கு வருத்தம்

ரவி மோகன் மன்னிப்பு கோரல் நீதிமன்ற உத்தரவை மீறியதாக ஒப்புக்கொண்டு பொது அறிவிப்பு

நடிகர் ரவி மோகன் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சை ஒன்றில் நீதிமன்றம் விதித்த தடையை மீறிய விஷயத்தில் பத்திரிகையில் பொது மன்னிப்பு கோரியுள்ளார். இது சினிமா வட்டாரத்திலும் சட்ட விரும்பிகளிடையேயும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ரவி மோகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்துக்கான வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

Ravi Mohan
Ravi Mohan

பின்னணி: என்ன நடந்தது?

இந்த விவாகரத்து விவகாரம் குறித்து சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவலான விவாதங்கள் தொடர்ந்தன. குறிப்பாக, பாடகி கெனிஷாவுடனான ரவி மோகனின் நெருக்கம் பல கேள்விகளை எழுப்பியது. ஆனால், கெனிஷா சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, இந்த பிரிவுக்கு தான் காரணம் இல்லை என்றும், இனி தனித்துச் செல்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் ரவி மோகன் செய்தியாளர்களை நேரில் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் தன் குழந்தைகளை பார்க்க முடியாத சூழல் இருப்பதாகவும், தன்னை புரிந்துகொண்டு வந்தவர்கள் விலக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை குறித்து ஒரு முக்கியமான ஆணை பிறப்பித்திருந்தது — ரவி மோகனும் ஆர்த்தியும் வழக்கு நடக்கும் வரை ஒருவருக்கொருவர் எதிராக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்பதே அந்த ஆணை. இந்த நீதிமன்ற ஆணையை மீறி ரவி மோகன் ஊடகங்களை சந்தித்ததாக ஆர்த்தி தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் என்ன சொன்னது?

அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ரவி மோகன் தரப்பு வழக்கறிஞர்கள் முக்கியமான ஒரு விஷயத்தை நீதிமன்றம் முன் தெரிவித்தனர் — தாங்கள் பொது மன்னிப்பு கோரி அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாக கூறினர். நீதிமன்றம் இதை பதிவு செய்துகொண்டு ஆர்த்தி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்தது.

ரவி மோகன்
ரவி மோகன்

இதையடுத்து ரவி மோகன் நீதிமன்றத்தில் தான் அளித்த வாக்குறுதியின்படி, செய்தித்தாளில் அதிகாரப்பூர்வ மன்னிப்பு அறிவிப்பு வெளியிட்டார். நீதிமன்றத்தின் ஆணையை மீறி ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதாகவும், அதனால் மனவேதனை அடைந்தவர்கள் அனைவரிடமும் வருந்துவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆவணத்தையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த விசாரணையில் என்ன நடக்கும் என்பதை ரசிகர்களும் ஊடகங்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

Leave a Comment