தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினை குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அளித்த கருத்து இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
மகேந்திரன் என்ன சொன்னார்?
சமீபத்திய பேட்டி ஒன்றில் மின்வெட்டு பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் அவர் நேரடியாக பேசினார். “இவ்வளவு நாளும் மின்சார பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருந்தீர்கள். இப்போது சில சிரமங்கள் வந்தால் ஆறு மாதம் பொறுத்துக்கொள்ள முடியாதா? தேவைப்பட்டால் என் வீட்டிலிருந்தே மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது எப்படி என்று எனக்கு தெரியும்” என்று கூறினார்.

எதிர்ப்பும் ஆதரவும் ஏன் எழுந்தது?
தொடர்ந்து அவர், “மைக் முன்னால் நின்று கேள்வி கேட்டால் வீட்டுக்கு மின்சாரம் வந்துவிடாது. கேள்வி கேட்பதை நிறுத்தும்போதுதான் பதில் கிடைக்கும்” என்றும் தெரிவித்தார்.இந்த கருத்துகளை சிலர் ஆதரித்து, தற்காலிக சிரமங்களை பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதே நேரத்தில், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகள் குறித்து கேள்வி கேட்பது மக்களின் ஜனநாயக உரிமை என்றும், பொறுப்புடையவர்கள் விளக்கம் தர வேண்டும் என்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மாஸ்டர் மகேந்திரனின் இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் கடும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.