ஷஜி பப்பான் வந்துட்டாரு! ஜெயசூர்யாவின் ‘ஆடு t 3’ டிரெய்லர் வெளியீடு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அந்த சிகப்பு முண்டு, முறுக்கிய மீசை, கூடவே அந்த பிண்ணனி இசை.. ‘ஷஜி பப்பான்’ திரையில் தோன்றினாலே போதும், தியேட்டரே அதிரும். மலையாள சினிமாவின் ஆகச்சிறந்த காமெடி கதாபாத்திரங்களில் ஒன்றான ஷஜி பப்பானின் மூன்றாவது ஆட்டம் இப்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது.

மலையாளத் திரையுலகில் ஒரு கல்ட் கிளாசிக் காமெடி படமாக உருவெடுத்த ‘ஆடு’ (Aadu) சீரிஸின் மூன்றாவது பாகம் ‘ஆடு 3’ குறித்த எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. நடிகர் ஜெயசூர்யா மற்றும் இயக்குநர் மிதுன் மானுவல் தாமஸ் கூட்டணியில் வெளியான முந்தைய இரண்டு பாகங்களும் கேரளாவைத் தாண்டி தமிழகத்திலும் பெரிய அளவில் ரசிக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது ‘ஆடு 3’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது.டிரெய்லரின் ஆரம்பத்திலிருந்தே ஷஜி பப்பான் மற்றும் அவரது நண்பர்கள் செய்யும் கலாட்டாக்கள் சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. ஒரு சின்ன விஷயத்தைப் பெரிய பிரச்சனையாக்கி, அதில் அவர்கள் சிக்கிக்கொள்ளும் அந்தப் பாணி இம்முறையும் அப்படியே தொடர்கிறது. ஜெயசூர்யாவின் அதே துள்ளலான நடிப்பு மற்றும் ஷாஜி பப்பானின் ‘சிக்னேச்சர்’ மேனரிசம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்த மூன்றாவது பாகத்தில் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பிரம்மாண்டமான மாற்றங்களைச் செய்துள்ளனர். குறிப்பாக, 3டி தொழில்நுட்பத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். டிரெய்லரில் காட்டப்படும் ஆக்ஷன் காட்சிகளும், காமெடிக்கு இணையாக விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் அமைந்துள்ளன.சமூக வலைதளங்களில் இந்த டிரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. ஷான் ரகுமானின் துடிப்பான இசை, ஷஜி பப்பானின் என்ட்ரியை இன்னும் மாஸாக மாற்றியிருக்கிறது. சன்னி வைன், விநாயகன் எனப் பழைய நட்சத்திரப் பட்டாளமும் இந்தப் பாகத்தில் இணைந்திருப்பது கூடுதல் பலம்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயசூர்யா ஒரு முழுநீள காமெடி படத்தில் களமிறங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. மலையாள சினிமா தற்போது சீரியஸான கதைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ‘ஆடு 3’ ஒரு பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னராக இருக்கும் எனத் தெரிகிறது.பல்லாயிரக்கணக்கான மீம்கள் மூலம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஷஜி பப்பான் கதாபாத்திரம், இந்த முறை திரையில் என்னென்ன மாற்றங்களைச் செய்யப்போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படப்பிடிப்புப் பணிகள் முடிந்து விரைவில் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.வேடிக்கையான மனிதர்களின் விசித்திரமான மோதல் மீண்டும் தொடங்கப்போகிறது.

Leave a Comment