கையில் ஒரு பச்சிளம் குழந்தை, இன்னொரு கையில் ஃபீடிங் பாட்டில்.. நரைத்த தாடியுடன் முதிர்ச்சியான அந்தத் தோற்றத்தைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு ‘கஜினி’ சஞ்சய் ராமசாமிதான் நினைவுக்கு வருகிறான். ஒருவேளை சஞ்சய் ராமசாமி இன்றும் வாழ்ந்து, வயதாகி ஒரு குழந்தைக்குத் தந்தையானால் எப்படி இருக்கும்? அந்த ஒரு பிம்பமே ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
சூர்யாவின் 46-வது திரைப்படம் குறித்து கடந்த சில நாட்களாக நிலவி வந்த யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ எனத் தொடர் வெற்றிகளைக் கொடுத்து வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ (Vishwanath & Sons) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.இந்தப் படத்தின் மிக முக்கியமான சுவாரஸ்யமே, சூர்யாவின் கதாபாத்திரம் ‘கஜினி’ படத்தின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான். இதனை இயக்குநர் வெங்கி அட்லூரியும், தயாரிப்பாளர் நாக வம்சியும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு நடுத்தர வயது மனிதனுக்கும், அவரது இளம் காதலிக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட ஒரு எமோஷனல் டிராமா இது என்பது படத்தின் போஸ்டரிலேயே தெரிகிறது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரவீணா டாண்டன் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குத் திரும்புகிறார். மேலும், ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ, பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்துள்ளது. சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “வித்தியாசமான காதல், நோக்கமுள்ள குடும்பம் – ஜூலையில் ஒரு முழுமையான எண்டர்டெய்னராக வருகிறோம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படம், சூர்யாவுடன் ‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு அவர் இணையும் இரண்டாவது படமாகும். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முழுமையாக முடிவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிக்ஸ் (Netflix) நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஒரு எளிய குடும்பக் கதையாகத் தெரிந்தாலும், அதில் சூர்யாவின் அந்த முதிர்ச்சியான தோற்றம் ஏதோ ஒரு பெரிய எமோஷனல் கனத்தை ஒளித்து வைத்திருப்பதாகவே தோன்றுகிறது.சஞ்சய் ராமசாமியின் அந்த ‘கிளாசிக்’ மேஜிக் மீண்டும் திரையில் நிகழப்போகிறது.