சினிமாவில் அம்மா கதாபாத்திரங்கள் என்றாலே அழுது வடியும் காலம் போய்விட்டது. இப்போது துணிச்சலான, கறாரான, அதே சமயம் அழுத்தமான பெண் கதாபாத்திரங்கள் திரையை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தாய் கிழவி’, தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய வகை கிராமத்துத் திரைப்படத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநரின் அதிரடித் தடம்
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தாய் கிழவி’, நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்த ஒரு தரமான திரை விருந்தாக அமைந்துள்ளது.வட்டியும் முதலும்… வசூலானதா ராதிகாவின் நடிப்பு? கருமாத்தூர் கிராமத்தில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் பவுனுத்தாயி (ராதிகா) தான் இந்தப் படத்தின் மையம். ஊரே வெறுக்கும் ஒரு மூதாட்டி, தன் சொந்தப் பிள்ளைகளே அவர் மரணத்திற்காகக் காத்திருக்கும் கொடுமை என ஒரு எதார்த்தமான கிராமத்துச் சூழலை இயக்குநர் கண்முன் நிறுத்தியுள்ளார். ஆண்பாவம் போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம், இயக்குநர் சிவக்குமார் முருகேசனுக்குக் கைகொடுத்திருக்கிறது.

பவுனுத்தாயிக்கு 160 சவரன் தங்கம் ரகசியமாக இருக்கிறது என்ற ஒரு செய்தி பரவியதும், அவரைச் சாக நினைத்த மகன்கள் காப்பாற்றத் துடிக்கும் காட்சிகள் சமூகத்தின் முகத்திரையைக் கிழிக்கின்றன. ராதிகா இந்தப் படத்தின் இதயம் என்றால் மிகையல்ல. சுமார் 140 நிமிடப் படத்தில் அவர் 40 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், படம் முழுக்க அவர் படுக்கையிலேயே கிடந்தாலும், அவரது தாக்கம் ஒவ்வொரு காட்சியிலும் அதிர்கிறது.
படம் நெடுகிலும் கமல்ஹாசனின் தாக்கம் மற்றும் அவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது. கமல்ஹாசனின் அறிவுசார் நகைச்சுவை பாணியை இயக்குநர் சரியாகப் பிடித்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை மற்றும் விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு கிராமத்து மணத்தை அப்படியே திரையில் கடத்துகின்றன. இளவரசு, அருள்தாஸ், சிங்கம்புலி, பாலசரவணன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.

இருப்பினும், இரண்டாம் பாதியில் சில லாஜிக் மீறல்கள் மற்றும் கிளைமாக்ஸில் அனைவரும் ஒரே இரவில் திருந்துவது போன்ற காட்சிகள் சற்று செயற்கையாகத் தெரிகின்றன. மருமகள் கதாபாத்திரங்களுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்ற உணர்வு மேலோங்குகிறது.ஆனாலும், பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சுய அதிகாரம் பற்றிப் பேசும் இந்தப் படம், ஒரு போதனையாக இல்லாமல் கலகலப்பான திரைக்கதையாக அமைந்ததே இதன் வெற்றி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மற்றுமொரு தரமான படைப்பு இது என்பதில் ஐயமில்லை.சொத்துக்காக அலையும் உறவுகளுக்கு மத்தியில், சுயமரியாதையோடு வாழ நினைக்கும் ஒரு தாயின் போராட்டமே இந்த ‘தாய் கிழவி’.