அர்ஜூன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் படம் ரூ.30 கோடிக்கும் மேல் வசூல் செய்து தொடர்ந்து பட்டையை கிளப்பி வரும் நிலையில், சுபாஷ் கே.ராஜ் அடுத்த படம் குறித்த தகவல் இப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை கிளப்பியிருக்கிறது.
பிளாஸ்ட் கொடுத்த வெற்றி என்ன?
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கீழ் உதவி இயக்குநராக அனுபவம் பெற்ற சுபாஷ் கே.ராஜ், தனது முதல் படமான பிளாஸ்டிலேயே ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான திரைக்கதையுடன் முழுக்க முழுக்க ஆக்சன் சார்ந்த படமாக உருவாக்கியிருக்கிறார். அர்ஜூனுக்கு சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய கம்பேக்கையும் இந்தப் படம் கொடுத்திருக்கிறது. அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்த படத்தில் கார்த்தியா?
இந்த வெற்றியை தொடர்ந்து சுபாஷ் கே.ராஜின் அடுத்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.பிளாஸ்ட் படத்தில் காட்டிய ஆக்சன் திரில்லர் பாணியை கார்த்தியுடன் தொடருவாரா, அல்லது வேறு மாதிரியான கதைக்களத்தில் முயற்சிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.