வெயிலின் நிழலில் அமர்ந்து கொட்டகைக்குள் சினிமா பார்த்த அந்த பழைய நினைவுகளை மெல்லத் தட்டி எழுப்புகிறது ஒரு டீசர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குநராகக் களம் இறங்கும் ‘டெக்ஸ்லா’வின் முதல் பார்வை இது.சினிமா உலகில் இயக்குநராகத் தடம் பதித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘3’, ‘வை ராஜா வை’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனது நான்காவது படைப்பிற்காகத் தயாராகிவிட்டார். இந்தப் புதிய படத்திற்கு ‘டெக்ஸ்லா’ (Texla) எனப் பெயரிடப்பட்டுள்ளது. நேற்று மாலை வெளியான இதன் டைட்டில் டீசர், ரசிகர்களிடையே ஒருவித ஏக்கத்தை (Nostalgia) கிளறியுள்ளது.
இந்த அறிவிப்பின் சுவாரஸ்யமே, படத்தின் டீசரை இந்தியத் திரையுலகின் ஜாம்பவான்கள் வெளியிட்டதுதான். தமிழில் மணிரத்னம், தெலுங்கில் சுகுமார், மலையாளத்தில் பிளெஸ்ஸி, கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி மற்றும் இந்தியில் அனுராக் கஷ்யப் எனப் பெரிய பட்டாளமே இந்தப் படத்திற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.’டெக்ஸ்லா’வின் டீசரைப் பார்க்கும் போது, இது ஒரு கிராமத்துப் பின்னணியில், பல தசாப்தங்களுக்கு முன்பு நடந்த ஒரு கதையாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. குறிப்பாகச் சிறுவர்களை மையப்படுத்தியே இந்தக் கதை நகர்வதை மேக்கிங் பாணி உணர்த்துகிறது. ஒரு காலத்தில் கொட்டகைகளில் அமர்ந்து மக்கள் சினிமா பார்த்த அந்த எதார்த்தமான சூழலை அப்படியே திரையில் கொண்டு வர படக்குழு முயற்சி செய்திருப்பது தெரிகிறது.
முக்கியமான மற்றொரு சிறப்பம்சம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்திருப்பது. ‘வை ராஜா வை’ படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் அமைந்திருப்பது இசை ரசிகர்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்துள்ளது. யுவனின் இசை இந்த மாதிரியான பழைய காலத்துக் கதைகளுக்கு எப்போதும் ஒரு கூடுதல் உயிரைக் கொடுக்கும்.கண்ணன் ரவியின் கே.ஆர்.ஜி (KRG Group) நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர்கள் தயாரிக்கும் ஒன்பதாவது தயாரிப்பு இதுவாகும். ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘டெக்ஸ்லா’வை பான்-இந்தியா அளவில் ஐந்து மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முந்தைய படங்களிலிருந்து ‘டெக்ஸ்லா’ முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும் எனத் தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. நட்சத்திரப் பட்டாளங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சிறுவர்களைச் சுற்றியே இந்த உலகத்தைப் படைத்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.பழைய நினைவுகளின் வாசனையோடு ‘டெக்ஸ்லா’ பயணிக்கத் தொடங்கியுள்ளது.