பெத்தி முதல் நாள் வசூல் ₹110 கோடி — ராம் சரண் மீண்டும் சாதித்தார்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே வசூல் புயலை கிளப்பியிருக்கிறது. உலகளவில் ₹110 கோடிக்கும் அதிகமான வசூலை முதல் நாளே திரட்டியுள்ள இந்த படம், தற்போது திரையுலகில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

முதல் நாள் வசூல் எண்கள் என்ன சொல்கின்றன?

இந்தியாவில் மட்டும் சுமார் ₹80 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே ₹67 கோடி வசூலாகியிருப்பது பெத்தி படத்தின் தாக்கத்தை காட்டுகிறது. தெலுங்கு மாநிலங்களில் நடந்த பிரீமியர் காட்சிகளிலிருந்தே ₹19 கோடி வசூல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளிலும் படம் நன்றாகவே ஓடியிருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள் என பல பகுதிகளிலும் முதல் நாளே ₹30 கோடி அளவுக்கு வசூல் திரட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இது சமீப காலங்களில் வெளியான பெரிய படங்களின் சாதனைகளுக்கு இணையான தொடக்கம் என்று சொல்லலாம்.

பெத்தி வசூல்
பெத்தி வசூல்

பிரீமியர் காட்சியிலிருந்தே நேர்மறை எதிர்வினை

வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கட்டி வைத்திருந்த படம், பிரீமியர் காட்சிகளிலிருந்தே நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதன் தாக்கம் முதல் நாள் வசூல் எண்களில் நேரடியாக பிரதிபலித்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. பல திரையரங்குகளில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படம் ஓடுவதால் வரும் நாட்களில் வசூல் வேகம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் என்ன சொல்கிறது?

புச்சி பாபு சனா இயக்கியுள்ள பெத்தி, ஒரு கிராமத்தின் ஒற்றுமை, விளையாட்டு, சமூக போராட்டங்களை மையமாகக்கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா கதை. ராம் சரணுடன் ஜான்வி கபூர், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுமார் ₹350 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தின் ப்ரீ-ரிலீஸ் வணிக மதிப்பு ₹220 கோடி என்று கூறப்படுகிறது. தற்போதைய வசூல் நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது, முதலீட்டை மீட்டெடுப்பது மட்டுமில்லாமல் புதிய சாதனைகளையும் படைக்கும் வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.

ராம் சரணின் தொழில் பயணத்தில் பெத்தி மற்றொரு முக்கியமான மைல்கல்லாக இடம்பெறும் என்பது இந்த முதல் நாள் வசூல் எண்களே உறுதிப்படுத்துகின்றன.

Leave a Comment